டெல்லி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. கடும் பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுதவிர நாடு முழுவது 25 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட நிலவரப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் நிதின் கட்காரி, பியூஷ் கோயல், சுப்ரியா சுலே ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கேரளா மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணிக்கும், வலது ஜனநாயக முன்னணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி அங்கு தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறார்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டுள்ள நிலையில், அங்கு அவர் முன்னிலையில் வகிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி 10க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திர முன்னிலை வகிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 ஆயிரம் வேட்பாளர்கள் நடப்பு மக்களவை தேர்தலில் களம் கண்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாஜக 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படிங்க: LIVE: 100க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை! - Lok Sabha Election Results 2024