டெல்லி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் 7 இடங்களில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணியை தவிர்த்து சுயேட்சைகள் முன்னிலையில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷிவன் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஹெனா ஷகாப் 2 ஆயிரத்து 713 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்யிட்டுள்ள ஜனதா தள வேட்பாளர் விஜயலட்சுமி தேவி 2 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
மகாராஷ்டிரா: அதேபோல் பாஜக - இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்கிலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் விஷால் பிரகாஷ் பாபு பட்டேல் 68 ஆயிரத்து 80 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் சஞ்சய் பாட்டீல் 54 ஆயிரத்து 73 வாக்குகள் பெற்று உள்ளார்.
பஞ்சாப்பில் உள்ள காதோர் ஷாகிப் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங் 1 லட்சத்து 2 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் குல்பிர் சிங் ஷிராவை விட 45 ஆயிரத்து 424 வாக்குகள் அதிகம் பெற்று அமிரித் பால் சிங் முன்னிலையில் உள்ளார்.
பஞ்சாப்: அதேபோல் மற்றொரு பஞ்சாப், பரித்கோட் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரப்ஜீத் சிங் கல்சா 70 ஆயிரத்து 648 வாக்குகள் பெற்றும் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோலை விட 25 ஆயிரத்து 785 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
டாமன் & டையு: யூனியன் பிரதேசமான டாமன் & டையூவில் சுயேட்சை வேட்பாளர் படேல் உமேஷ்பாய் பாபுபாய் 20 ஆயிரத்து 479 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ரசீத் ஷேக் 85 ஆயிரத்து 919 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா 49 ஆயிரத்து 642 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
லடாக்: அதேபோல் லடாக் தொகுதியில் சுயேட்சை முகமது ஹனீப் 19 ஆயிரத்து 858 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 6 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: கணிக்க முடியாத மாநிலங்கள்? வெற்றி வாகை சூடப்போவது பாஜகவா? காங்கிரசா? - Lok Sabha Election Results 2024