மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி தாலுகா துக்ஷேவாட் என்ற இடத்தில், நேற்று (மார்ச் 2) இரவு தண்ணீர் தேடி வந்த ஆண் சிறுத்தை ஒன்றின் தலை, தண்ணீர் இருந்த உலோகப் பாத்திரத்தில் சிக்கி உள்ளது. இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்ததை அடுத்து, சுமார் ஐந்து மணி நேர நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, வனச்சரக அலுவலர் சவிதா சோனாவனே தலைமையிலான வனத்துறையினரால் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கூண்டில் அடைக்கப்பட்ட ஆண் சிறுத்தையை அங்கிருந்து அழைத்துச் சென்று, அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என கொண்டைபரி வனத்துறை வனச்சரக அலுவலர் சவிதா சோனாவனே தெரிவித்தார்.
இந்தியாவில் சிறுத்தைகள்: இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு மதிப்பாய்வின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், 2018-ஆம் ஆண்டு 1,690ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டில் 1,985ஆக அதிகரித்துள்ளது. இந்த மாநிலம், இப்போது இந்தியாவின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகளைக் கொண்டுள்ள மாநிலமாகத் திகழ்கிறது. இது இந்தியாவில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில் 14 சதவிகிதம் ஆகும்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 2018இல் 12,852 ஆக இருந்து, தற்போது 13,874 ஆக அதிகரித்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்து தற்போது 3,907 சிறுத்தைகள் அதிகமாக உள்ளது. மேலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ள மாநிலமாக மத்தியப் பிரதேசம் முன்னணியில் உள்ளது.
மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவை மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் கீழ் வகைப்படுத்துகிறது. கணக்கெடுக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில், மகாராஷ்டிராவில் உள்ள மெல்காட் புலிகள் காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ளன. இதனைத் தவிர்த்து தடோபா, நவேகான், சஹ்யாத்ரி மற்றும் பென்ச் ஆகிய இடங்களில் அதிக அளவில் சிறுத்தைகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதையும் படிங்க: மேனகா, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பா? உ.பியில் பாஜக திட்டம் என்ன?