மான்சா (பஞ்சாப்): சரண் கவுர் - பால்கவுர் சிங் தம்பதியின் ஒரே மகன் சித்து மூஸ்வாலா. பஞ்சாப்பின் புகழ் பெற்ற பாடகரான இவர், கடந்த 2022ஆம் ஆண்டு மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சித்து மூஸ்வாலாவின் பெற்றோர் மற்றும் ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.
இதையடுத்து, சித்துவின் பெற்றோர்கள் ஊடகங்களில் இருந்து விலகியே இருந்தனர். இந்நிலையில், தற்போது சித்து மூஸ்வாலாவின் தாய் சரண் கவுர் (58), ஐ.வி.எப் (IVF) எனக் கூறப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பமாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, அடுத்த சில மாதங்களில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும், இதன் காரணமாகத் தான் சரண் கவுர் மற்றும் பால்கவுர் சிங் தங்களின் நெருங்கிய வட்டாரங்களைத் தவிர, பொதுமக்கள் மற்றும் சித்து மூஸ்வாலா ரசிகர்களிடமிருந்து ஒதுங்கி இருந்ததாகத் தெரிகிறது. மேலும், சரண் கவுர் தற்போது மருத்துவக் குழு மேற்பார்வையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூஸ்வாலா அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால், அவரின் மரணத்திற்கு பிறகு சித்துவின் குடும்பம் தனியாகவே இருந்தது.
இந்நிலையில், ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்துவின் பெற்றோர், செயற்கை கருத்தரித்தல் முறையில் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், அவர்களின் தனிமைக்கான ஆதரவாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.
செயற்கை கருத்தரித்தல் முறை (IVF): பல ஆண்டுகளாக கருவுற்றலில் பிரச்னை உள்ளவர்களுக்கு, ஐ.வி.எப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறை உதவுகிறது. இந்த முறை, குழந்தைப் பேறு வழங்குவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ஐ.வி.எப் முறையில், பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் செயற்கையாக டெஸ்ட் டியூபில் இணைய வைத்து, சில நாட்களுக்கு பின் மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மூலம் பெண்ணின் கருப்பையில் பொருத்தப்படுகிறது.
இவ்வாறு பொருத்தப்படும் கரு, இயல்பான கருவைப் போலவே தாயின் கருப்பையில் வளர்ந்து, தொப்புள் கொடி மூலம் உணவைப் பெறும். இந்த செயல்முறைகள் அனைத்தும் இயற்கையாகவே நிகழ்வதால், இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமான குழந்தைகளாகவே பிறப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி மதுமான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறை சம்மன்! அமலாக்கத்துறை திட்டம் என்ன?