குஜராத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி! சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தின் கிணறு தோண்டும் போது சோகம்! - Gujarat poisonous gas leak
Gujarat poisonous gas leak 3 labourers die: நிலக்கரி சுரங்கம் அமைக்க குஜராத் மாநிலம் தேவ்பரா கிராமத்தில் கிணறு தோண்டும் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published : Feb 16, 2024, 10:20 PM IST
சுரேந்திர நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள தேவ்பரா கிராமத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காகக் கிணறு தோண்டும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது கிணறு தோண்டு பணியில் ஈடுபட்டு இருந்த புலம் பெயர்ந்த தொழிலாளிகள் 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட முலி காவல் நிலைய காவல்துறையினர் இச்சம்பவத்திற்குக் காரணமான இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நிலத்தின் உரிமையாளரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுரேந்திர நகரில் உள்ள ராம்பர்டா கிராமத்தைச் சேர்ந்த சத்வீர் கர்படா மற்றும் ரஞ்சித் தங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நிலக்கரி சுரங்கத்திற்காகக் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளிகள் சர்குபாய் காரத், ராம்தேவ் சிங் ராவத் மற்றும் சந்து சிங் குப் சிங் ராவத் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக முலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பணியிலிருந்த மூன்று தொழிலாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்திலுள்ள முலி, தங்காத் உள்ளிட்ட தாலுகாக்களில் அரசால் கைவிடப்பட்ட சுரங்களில் சில கும்பல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி குழிகள் தோண்டி சட்டவிரோதமாகக் கனிமங்கள் திருடி வந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறைக்குப் புகார்கள் வந்ததையடுத்து சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை உதவியுடன் சட்டவிரோதமாகத் தோண்டப்பட்ட குழிகள் நிரப்பும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதே போல் சட்ட விரோதமாகத் தோண்டப்பட்ட குழிகள் 400க்கும் மேல் அங்கு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ரூ.50 கோடிக்கு விலை பேசியதா பாஜக? முதலமைச்சரின் புகார் என்ன?