கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவனை வளாகத்திலேயே கொடூரமாக கொல்லப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடல் பாகங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்ததும் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையை உடனே மேற்கொள்ள அரசை வலியுறுத்தியும் நேற்று (ஆகஸ்ட் 27) தலைமைச் செயலகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்றவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சியான பாஜக இன்று மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் (Bangla Banth) நடத்தி வருகிறது. இப்போராட்டத்தில் மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான சுகந்தா மசுன்தர் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
#WATCH | West Bengal BJP President Dr. Sukanta Majumdar sits on the road in protest during 12-hour 'Bengal Bandh' call in Kolkata pic.twitter.com/TugnZo8OgZ
— ANI (@ANI) August 28, 2024
இதுகுறித்து சுகந்தா மசுன்தர் கூறும்போது, "மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. மாநில காவல் துறை, பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக உள்ளது. அவர்களால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. மாறாக பாஜக தலைவர்களை கைது செய்கின்றனர். இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, நாளை முதல் (ஆகஸ்ட் 29) ஒரு வாரம் பாஜகவினர் மேற்கொள்ளவுள்ள தர்ணாவுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று சுகந்தா மசுன்தர் தெரிவித்தார்.
இதனிடையே, அசன்சோலில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள், அங்கு ரயில்களை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் முழு அடைப்பு போராட்டம் ஒருபுறம் நடக்க, மேற்கு வங்க மாநில இளநிலை மருத்துவர் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்களும் கொல்கத்தாவில் இன்று கண்டன பேரணி நடத்தினர். இதில் மருத்துவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
#WATCH | Kolkata | West Bengal Junior Doctors' Front holds protest rally demanding justice for woman doctor who was raped and murdered at RG Kar Medical College and Hospital pic.twitter.com/fFxP0Mk877
— ANI (@ANI) August 28, 2024
"கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து முன்பு மருத்துவர்கள் மட்டும் பங்கேற்ற போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். ஆனால், இன்று நடைபெறும் கண்டன பேரணியில் பங்கேற்க அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்" என்று ஆர்.சி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் மசூன்தர் கூறினார்.
இதனிடையே, பெண் மருத்துவர் படுகொலை விவகாரத்தை வைத்து, மாநிலத்தில் பாஜக அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு; முக்கிய கைதியிடம் உண்மைக் கண்டறியும் சோதனை!