டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவரை அடுத்த நாளே கொல்கத்தா காவல்துறை கைது செய்தது. மருத்துவக்கல்லூரி வளாகத்துக்குள்ளேயே பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கொல்கத்தாவை உலுக்கியது.
மேலும், இந்த சம்பவத்தை எதிர்த்து கர் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு மருத்துவ மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவத்தினை கண்டித்து நாடு முழுக்க மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டங்களை கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கு சீர்கெடாமல் தடுக்க அனைத்து மாநில காவல்துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதாவது, கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தின் போது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சட்ட ஒழுங்கு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த அப்டேட்டுகளை அனுப்ப வசதியாக, கட்டுப்பாட்டு அறையின் மின்னஞ்சல் முகவரி, வாட்சப் எண்கள், ஃபேக்ஸ் முகவரிகளை உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: செமினார் ஹாலில் பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. கொலைக்கு பின் தூங்கிய அரக்கன்.. கொல்கத்தாவை உலுக்கிய வழக்கு!