மைசூரு: கர்நாடக மாநிலம் ஹசன் மக்களவை தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய சதீஷ் பாபன்னா என்பவர் தனது தாயை கடத்தியதாக மைசூரு கிருஷ்ண ராஜ நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அண்மையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக வெளியான ஆபாச வீடியோக்களில், புகார் அளித்த இளைஞரின் தாயார், கயிறு கொண்டு கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் அளித்த புகாரில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டில் பணிப் பெண்ணாக சம்பந்தப்பட்ட பெண் பணியாற்றியதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியதாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரேவண்ணா தொடர்புடைய சதீஷ் பாபன்னா என்பவர் தங்களது வீட்டு வந்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது என மிரட்டியதாக தெரிவித்து உள்ளார். தொடர்ந்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 9 மணிக்கு மீண்டும் வந்த சதீஷ் பாபன்னா, "உனது அம்மா பிடிபட்டால் சிக்கலில் ஏற்படக் கூடும், நீங்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டி வரும். உங்களை அழைத்துச் செல்ல ரேவண்ணா கூறியுள்ளார்" என்று கூறி தனது தாயாரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக இளைஞர் புகாரில் தெரிவித்து உள்ளார்.
அன்று முதல் தனது தாயாரை காணவில்லை என்றும் மே 1ஆம் தேதி தனது நண்பர்கள் மூலம் தான் தனது தாயார் தொடர்புடையதாக கூறப்படும் ஆபாச வீடியோ விவகாரம் தனக்கு தெரியவரும் என இளைஞர் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்ற நோக்கத்திற்காக தனது தாயார் கடத்தப்பட்டதாக இளைஞர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக கிருஷ்ண ராஜ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியதாக தகவல் பரவிய நிலையில், மத்திய அரசு தரப்பில் அவருக்கு வழங்கப்பட்ட தூதரக ரீதியிலான பாஸ்போர்ட்டை முடக்குமாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார். அதேநேரம் பிரஜ்வல் ரேவண்னா ஜெர்மனி செல்ல விசா ஏதும் வழங்கப்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே அபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்! சோனியா, பிரியங்கா காந்தி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்! - Rahul File Nomination In Rae Bareli