சண்டிகர்: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி பஞ்சாப்பில் உள்ள கதூர் ஷாகீப் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாரீஸ் டி பஞ்சாப் என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தவாறே மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அம்ரித் பால் சிங், ஒரு லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி பன்சாப் கதூர் ஷாகீப் தொகுதியில் போட்டியிட்ட அம்ரித் பால் சிங் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்பிர் சிங் ஷிரா 1 லட்சத்து 96 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் லலித் சிங் புல்லார் 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித் பால் சிங் தனது வழக்கறிஞர் மூலம் மக்களவை தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து போட்டியிட்டார்.
பஞ்சாப்பின் கதூர் ஷாகீப் மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கதூர் ஷாகீப் மக்களவை தொகுதியின் கீழ் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜண்டியாலா, தர்ன் தரன், கெம் கரன், பட்டி, கதூர் ஷாகீப், பாபா பகாலா, கபுர்தலா, சுல்தான்பூர் லோதி மற்றும் ஜிரா ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடடந்த ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் கதூர் ஷாகீப் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி கொலையாளி மகன் வெற்றி முகம்: அதேபோல் பரித்கோட் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரப்ஜித் சிங் கால்சா என்பவர் முன்னிலை வகிக்கிறார். மொஹாலியை சேர்ந்தவரான சரப்ஜித் சிங் கால்சா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை குற்றவாளி பியாந்த் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பரித்கோட் மக்களவை தொகுதியில் போட்டியிட்டுள்ள சார்ப்ஜித் சிங் கால்சா, 2 லட்சத்து 96 ஆயிரத்து 922 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோல் 2 லட்சத்து 26 ஆயிரத்து 676 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதையும் படிங்க: LIVE: பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் வெற்றி! - Lok Sabha Election Results 2024