டெல்லி : தலைநகர் டெல்லியில் கலால் வரி கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி பதியப்பட்ட வழக்கில் மார்ச் 21ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறி அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது.
இதையடுத்து மார்ச்17ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று (மார்ச்.16) டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் திவ்யா மல்கோத்ரா உத்தரவிட்டார்.
இந்நிலையில், டெல்லி நீர் வாரியம் மற்றும் மதுபான கொள்கை பண மோசடி வழக்கில் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் அத்திசி, டெல்லி நீர் வாரியம் வழக்கு குறித்து யாரும் அறிந்து இருக்க முடியாது என்றும், மக்களவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து அவரை கைது செய்ய டெல்லி நீர் வாரிய வழக்கு மற்றொரு திட்டம் என்றும் தெரிவித்தார்.
டெல்லி நீர் வாரியம் மற்றும் பண மோசடி வழக்கில் அடுத்த வாரம் ஆஜராக கோரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இரண்டு சம்மன்கள் அனுப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் கலால் வரி கொள்கை வகுத்ததில் தனியார் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படிடையில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், கடந்த மார்ச்.15 ஆம் தேதி அவரது ஐதராபாத் இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவுக்கு பின்னர் கவிதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!