ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கின. சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட 49 பேர் உட்பட 86 எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் முபாரக் குல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவின்போது பலர் தங்களது தாய் மொழியில் பதவி ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக காஷ்மீரி, டோக்ரி, சமஸ்கிருதம், ஆங்கிலம், உருது மற்றும் பஹாரி, கோஜ்ரி, ஷீனா மொழிகளிலும் எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் ஒமர் அப்துல்லா காஷ்மீரி மொழியில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தேசிய மாநாடு கட்சி அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பதவி ஏற்ற பெரும்பாலான எம்எல்ஏக்கள் காஷ்மீரி மொழியில் பதவி ஏற்றுக் கொண்டனர். ஷாஜத் ஷாபி, ஜாவியாத் மிர்சால் ஆகியோர் பஹாரி மொழியில் பதவி ஏற்றனர். குர்ஷித் அகமது 'கோஜ்ரி' மொழியிலும், நசீர் குரேசி 'ஷீனா' மொழியிலும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
எம்எல்ஏவும் காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான தாரிக் ஹமீத் காரா, பிடிபி கட்சியின் தலைவர் சாஜாத் கனி லோன் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். பாஜக எம்எல்ஏக்கள் டோக்ரி மொழியில் பதவி ஏற்றனர். குறிப்பாக பாஜக எம்எல்ஏக்கள் டோக்ரா பாரம்பரிய தலைபாகை அணிந்து வந்திருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்