பெங்களூரு : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கே.ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கினார். மாநிலத்தில் பெருவாரியான லிங்காயத் மற்றும் ஒக்காலிகா சமூக மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த சாதி வாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் அரசு சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மட்டுமே பெற்று உள்ளதாகவும், அமைச்சரவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கலந்து ஆலோசித்து அதன்பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
Karnataka caste census report to be submitted to state government today: Chairman Jayaprakash Hegde
— ANI Digital (@ani_digital) February 28, 2024
Read @ANI Story | https://t.co/JXN23jw4lw#Karnataka #JayaprakashHegde #CasteCensusReport pic.twitter.com/f82iLxKSP4
கர்நாடகாவில் இரண்டு பெரும் சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை லிங்காயத் மற்றும் ஒக்காலிகா சமூகங்கள் ஆகும். இந்த கணக்கெடுப்பு குறித்து ஆட்சேபனை தெரிவித்து உள்ள இரு சமூகங்களும், அறிக்கை அறிவியல் பூர்வமானது அல்ல என்றும், அதை நிராகரித்து, புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவல்களை அரசு வெளியிடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இடைக்கால மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு வெளியிட தடை விதிக்கக் கோரியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி என்.வி அன்ஜரியா மற்றும் டி.ஜி சிவசங்கர் கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (மார்ச்.1) இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு, சித்தராமையா தலைமையிலான அரசு இதே போல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அப்போதைய கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காந்தராஜூ சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினார். 2018 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், சித்தராமையாவின் ஆட்சியும் முடியும் தருவாயில் இருந்ததால் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் - டிஜிசிஏ உத்தரவு! என்ன காரணம் தெரியுமா?