டெல்லி: டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், மத்திய அரசின் வரிப் பகிர்வுக் கொள்கைகளை எதிர்த்து, கர்நாடக காங்கிரஸ் சார்பாக போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். முன்னதாக, இதற்கான அனுமதி பெறப்பட்டு ஒரு திட்டமிடப்பட்ட போராட்டமாக நடைபெறுகிறது.
மேலும், கர்நாடகாவின் பொருளாதார ஒடுக்குமுறையில் மத்திய அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் சித்தராமையா, மத்திய அரசுக்கு எதிராகப் போராட அதிகளவிலான மக்கள் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த போராட்டமானது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் நடைபெற உள்ளதாகவும் சித்தராமையா அறிவித்தார்.
இதனிடையே, இந்தப் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது அல்ல என அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “திட்டமிடப்பட்ட இந்த போராட்டம் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரானது அல்ல மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கட்சி கொள்கைகளை மறந்து, கர்நாடக மக்களுக்காக இந்த போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் இருக்கிறோம்.
நாம் மத்திய அரசுடன் ஒத்துழைத்துச் செல்கிறோம். ஆனால், மத்திய அரசு நம் மீது பாரபட்சம் காட்டுகிறது. கரோனா பேரிடரில் இருந்தே, நமக்குத் தேவையான சரியான நிவாரணம் வழங்கப்படவில்லை. ஏன், கனமழைக்கு கூட சரியான நிவாரணம் கிடைக்கப் பெறவில்லை. அது மட்டுமல்லாமல், பாத்ரா மெலந்தே திட்டத்திற்கான 5 ஆயிரத்து 300 கோடியும் ஒதுக்கப்படவில்லை.
எனவே, இந்தப் போராட்டமானது பாஜகவுக்கு எதிரானது அல்ல. மாறாக, இது நிதி விநியோகம் மற்றும் வறட்சி நிவாரணத்திற்கு நிதி விநியோகிக்காமல் இருப்பதற்கு எதிரான போராட்டம்” என தெரிவித்து இருந்தார். மேலும், நேற்றைய மக்களவை கூட்டத்தொடரில், தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்குத் தேவையான நிதிப் பங்கீட்டை எப்போது மத்திய அரசு விடுவிக்கும் என நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், பேரிடர் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதில்லை என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், மத்தியில் முன்பு இருந்த ஆட்சியை விட மூன்று மடங்கு நிவாரணத்தை அதிகரித்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கர்நாடக அரசு நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை எனக் கூறி கர்நாடக பாஜக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?