டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் பெண் மருத்துவர் கொலை வழக்கு குறித்த விசாரணையின் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட நீதிபதிகள், பெண் மருத்துவர் வழக்கை தொடக்கத்தில் கையாண்ட காவல்துறையின் போக்கை கடுமையாக சாடினர்.
நீதிபதிகள்: பெண் மருத்துவரின் கொலை தொடர்பாக ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 10.10 மணிக்கு காவல்துறை நாள் குறிப்பில் பதிவாகியுள்ளது. ஆனால், இரவு 11.30 மணிக்குத்தான் சம்பவ இடம் பாதுகாக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா?
அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இல்லை.. இல்லை.. அதற்குத்தான் நிறைய நேரம் எடுத்தது. இது துரதிர்ஷ்டவசமானது. நிமிடத்திற்கு நிமிடம் என்ன நடந்தது என்பதை வீடியோ பதிவு மூலமாக வழங்கியுள்ளேன்.
நீதிபதிகள்: பிரேதப் பரிசோதனை எப்போது நடந்தது?
அரசுத் தரப்பு: மாலை 6.10 முதல் 7.10 மணி வரை.
நீதிபதிகள்: எப்ஐஆர் எப்போது போடப்பட்டது? இயற்கைக்கு மாறான மரணம் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?
அரசுத் தரப்பு: இரவு 11.30 மணி
நீதிபதி பார்திவாலா: இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னரே எப்படி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது? உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லும்போது, அது இயற்கைக்கு மாறான மரணமா என்று தெரியவில்லையா? அப்படி இயற்கைக்கு மாறான மரணம் இல்லை என்றால், நீங்கள் ஏன் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்?
பிரேதப் பரிசோதனை செய்தால் அது இயற்கைக்கு மாறான மரணம் என்று அர்த்தம். பரிசோதனையை மாலை 6.10 முதல் 7.10 மணி வரை செய்துள்ளீர்கள். அப்படி இருக்கையில், இரவு 11.30 மணிக்கு வழக்குப் பதிவு செய்வதில் என்ன திட்டம் உள்ளது. எனது 30 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வழக்கை நான் சந்தித்ததே இல்லை. இந்த வழக்கில் அடிப்படை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைக்கூட காவல்துறை பின்பற்றவில்லை.
அடுத்த விசாரணையின்போது, இந்த வழக்கை முதலில் இருந்து கையாண்ட அந்த காவல்துறை அதிகாரி ஆஜராக வேண்டும். அவர் ஏன் இவ்வாறு கையாண்டுள்ளார் என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிஐ கொடுத்துள்ள அறிக்கையும், காவல்துறை தரப்பில் சொல்லப்படுவதும் முரணாக உள்ளது என்று தெரிவித்து, வழக்கு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இரு மாநில போலீசாரை விழிபிதுங்க வைத்த அசாம் சிறுமி.. கேரளாவில் நடந்தது என்ன?