பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரஜ்வெல் ரேவண்ணா தொடர்புடையதாக கூறப்படும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பெண்களை பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.
உதவி கேட்ட வந்த பெண்களிடம் பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தற்போது அந்த வீடியோ வெளியானதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி கர்நாட்கா மாநில மகளிர் ஆணைய தலைவர், மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். இந்த குழு வழங்கும் அறிக்கையை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே பிரஜ்வெல் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் நீக்கக் கோரி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குள் குரல் எழுந்தது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவுகவுடா தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எச்.டி குமாரசாமி, ஆபாச வீடியோ விவகாரத்தில் அரசு அமைத்து உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, ஆபாச வீடியோ விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட யாருக்கும் கட்சி துணை நிற்காது என்று தெரிவித்தார். ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜக உறுதியான நிலைப்பாட்டை கொண்டு இருப்பதாகவும் இந்த வழக்கில் எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்க முடியாது என்றும் கர்நாடக் அரசு ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழு நியமித்து உள்ளதால் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த வழக்கை பாஜகவோ அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளமோ ஆதரிக்கவில்லை என்றும் பெண்கள் சக்தி பக்கம் எப்போது பாஜக நிற்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெளிவாக கூறிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் புலனாய்வு விசாரணையை மாநில அரசு மேற்கொண்டு அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டு இருப்பதாகவும் பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் தேவுகடா பேரன் ஆபாச வீடியோ விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - சித்தராமையா! - Deve Gowda Grandson Sex Scandal