ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் சுரங்கப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் தொழிலாளர்கள் 6 பேர், மருத்துவர் என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா,முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் ஆண்டு முழுவதும் போக்குவரத்து இடையூறு இன்றி தொடர்வதற்காக ககாங்கீர் என்ற இடத்தில் இரண்டு சுரங்கபாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கபாதை கட்டுமானத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக மருத்துவர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
வெளிமாநில தொழிலாளர்கள் பணியை முடித்துக் கொண்டு நேற்று மாலை தங்கியிருந்த முகாமுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தொழிலாளர்களை நோக்கி மர்மநபர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மருத்துவர் மற்றும் தொழிலாளர்கள் நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்,"என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு பதவி ஏற்றபின்னர் வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த 16ஆம் தேதி பீகாரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஷோபியான் பகுதியில் தீவிரவாதி ஒருவர் சுட்டத்தில் உயிரிழந்தார்.
The dastardly terror attack on civilians in Gagangir, J&K, is a despicable act of cowardice. Those involved in this heinous act will not be spared and will face the harshest response from our security forces. At this moment of immense grief, I extend my sincerest condolences to…
— Amit Shah (@AmitShah) October 20, 2024
கடும் நடவடிக்கை: இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். காயம் அடைந்தோர் விரைவாக குணம் பெற பிரார்த்திக்கின்றேன். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பு படையினரின் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்,"என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"முக்கியமான கட்டுமான திட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆயுதம் ஏதும் அற்ற அப்பாவி தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
गांदरबल, जम्मू-कश्मीर में कायराना आतंकी हमले में 5 मजदूरों समेत छह नागरिकों की हत्या अत्यंत निंदनीय है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 20, 2024
निर्दोष नागरिकों की हत्या करके आम जनता के बीच हिंसा व दहशत फैलाने जैसे कृत्य मानवता के विरुद्ध अपराध हैं। इसके खिलाफ पूरा देश एकजुट है।
शोक-संतप्त परिवारों के प्रति मेरी…
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வத்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"ஏதும் அறியா மக்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் மனிதநேயத்துக்கு எதிரான குற்றம். இது போன்ற வன்முறைக்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஒற்றுமையாக இருக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தோர் விரைவில் குணம் பெற விரும்புகின்றேன்,"என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முக்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்