ஶ்ரீநகர்: ஶ்ரீநகரின் கான்யார் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். மேலும் தெற்கு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர்,"கான்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த இடத்தில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினர்,"என்றார்.
இது குறித்து வெளியான காட்சிகளில் பெரும் அளவுக்கு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டிருப்பதும், அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பாந்திபோரா பகுதியிலும் பாதுகாப்புப்படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நவம்பர் ஒன்றாம் தேதி மாலை சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது.பாந்திபோராவின் பானார் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பின்னர் அவர்கள் காட்டு பகுதியில் தப்பி சென்று விட்டனர். காட்டு பகுதியில் தப்பி சென்ற தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது,"எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஷாங்குஸ் லார்னூ கச்வான் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் மையப்பகுதியில் உள்ள புத்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியை அடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மேற்கொண்ட ஆய்வு கூட்டத்தில்,"வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று உத்தரவிட்டிருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்