இலங்கை: இலங்கை மற்றும் இந்தியப் பக்தர்கள் இணைந்து ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்தியர்களின்றி நேற்று (பிப் 23) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று (பிப்.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று (பிப்.24) இடம்பெற்றன. வருடாந்திரத் திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இத்திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை விதித்து இலங்கையில் உள்ள நீதிமன்றம், தீர்ப்பளித்தது. இதனைக் கண்டித்தும், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாக மீனவர்கள் அறிவித்தனர். இதனால், இந்தியப் பக்தர்கள் இந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்த விழாவில் இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் பங்கேற்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டு சகோதரத்துவத்தை வளர்க்கும் இடமாக இருக்கிறது.
விழாவில் பங்கேற்பதைத் தடுக்கும் விதமாக நிகழ்வுகள் வரும் காலத்தில் நடைபெறக் கூடாது. மக்கள் தங்களுடைய பிரச்சனைகள் மற்றும் தேவைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களது உரிமை. ஆனால், போராட்டங்கள் பக்தி முயற்சிகளைத் தடையாக அமையக் கூடாது என்பது தான் எங்களது கோரிக்கை என இலங்கை பாதிரியார் கூறியுள்ளார்.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?