சண்டிகர்: அரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் நவ்ஜித் சந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எம்.டெக் படிப்பில் சேர கல்வி விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மெல்போர்ன் நகரில் தங்கி எம்.டெக் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (மே.4) இந்திய மாணவர்களுக்கு இடையிலான சண்டையை தடுக்க முயன்ற போது நவ்ஜித் சந்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நவ்ஜித் சந்துவின் மாமா யஷ்வீர், நண்பர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரை அழைத்து வர நவ்ஜித் காருடன் சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டில் சக இந்திய மாணவர்களுக்கு இடையே வீட்டு வாடகை தொகையை பிரிப்பதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க முயன்ற போது சக மாணவர் கத்தியால் குத்தியதில் நவ்ஜித் சந்து நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் நவ்ஜித் சந்து பரிதாபமாக உயிரிழந்ததாக அவரது மாமா யஷ்வீர் தெரிவித்துள்ளார். நவ்ஜித் சந்துவுடன் சேர்த்து கத்திக் குத்து சம்பவத்தில் மற்றொரு இளைஞரும் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியால் குத்திய இளைஞரும் அரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்தவர் என நவ்ஜித் சந்துவின் மாமா தெரிவித்துள்ளார்.
நவ்ஜீத் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் இறந்த செய்தி கேட்டு நவ்ஜித்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது மகனின் சடலத்தை விரைவாக சொந்த ஊர் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவ்ஜித் சந்துவின் கல்விச் செலவுக்காக தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து அவரது தந்தை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி உள்ளார். தனது மகன் எம்.டெக் பட்டம் பெற்று சொந்த ஊர் திரும்புவார் என எண்ணிய பெற்றோருக்கு அவரது இறப்பு செய்தி இடியாய் இறங்கியுள்ளது. உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா சென்ற இந்தியா மாணவர் சக இந்திய மாணவரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு வினாத் தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் என்ன? - NTA On Neet Question Leak Issue