புதுடெல்லி: காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சதி திட்டம் பிரதமர் நரேந்திரமோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்ற கனடா ஊடகத்தின் செய்திக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த 45 வயதான நிஜ்ஜார், கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார். அங்கு அவர் பிளம்பிங் தொழில் செய்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் காலிஸ்தான் இயக்கத்தை முன்னெடுத்தும் வந்தார். இதனிடையே இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து இந்தியா-கனடா இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கு இடையேயான தூதரக மட்டத்திலான உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கனடாவில் இருந்து வெளியாகும் குளோப் அண்ட் மெயில் எனும் பத்திரிகையில் பெயர் சொல்ல விரும்பாத கனடா அதிகாரி கூறியதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த நிஜ்ஜார் கொலை சதித்திட்டம் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் இந்த கொலை சதித்திட்டம் முன்கூட்டியே தெரியும் என்று அந்த கனடா பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!
இந்த நிலையில் கனடா பத்திரிகையின் செய்திக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இது ஒரு அபத்தமான செய்தி, இதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இந்த செய்தி மேலும் அதனை சீர்கெடுக்கிறது. நாங்கள் பொதுவாக இது போன்ற ஊடக செய்திகளுக்கு கருத்துச் சொல்வதில்லை. ஆனால், இந்த பொய் செய்தியை நிராகரிக்க வேண்டும். இது போன்ற அவதூறு பிரச்சாரங்கள் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன,"என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கருத்துத் தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜார் கொலைக்கு எதிராக இந்திய அரசு இருப்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன," என்று கூறியிருந்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான தூரதரக உறவில் சிக்கல் எழுந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்