ஹைதராபாத்: 10 ஆண்டுகளில் 1,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து, வேறு எந்த அரசு மருத்துவமனையும் செய்யாத சாதனையை ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (NIMS) நிகழ்த்தியுள்ளது. இந்த மருத்துவமனையில் செய்யப்பட்ட அனைத்து மாற்று அறுவை சிகிச்சைகளும் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டில் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதியின் (CMRF) கீழ் இலவசமாக செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
60% உறுப்பு தானம்: தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத மக்கள் நிம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்கின்றனர் மருத்துவ குழுவினர். மேலும், இந்த மாற்று அறுவை சிகிச்சைகளில், 60% சிறுநீரகங்கள் வாழும் நன்கொடையாளர்களால் தானம் செய்யப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், மூளைச்சாவு அடைந்த நபர்களிடமிருந்து 40% சிறுநீரகங்கள் பெறப்பட்டது என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை, 1,730 சிறுநீரக அறுவை சிகிச்சைகளை செய்துள்ள நிம்ஸ் மருத்திவமனை மருத்துவ குழுவினர் 1989ல் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். ஜீவந்தன் அறக்கட்டளை (Jeevandan Trust) உருவான பின்னர், மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது அதிகரித்து என்கின்றனர் மருத்துவர்கள்.
முதலமைச்சர் வாழ்த்து: நிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களின் சிறப்பான பங்களிப்பிற்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா மற்றும் நிம்ஸ் இயக்குநர் பீரப்பா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
சிறுநீரக நோய் அறிகுறி: ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். சிறுநீர் கழித்தல், மூச்சுத் திணறல், பசியின்மை, கால்கள், கணுக்கால் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம், மார்பு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் காட்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார் டாக்டர் ராகுல் தேவராஜ்.
இதையும் படிங்க: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தாயான 32 வயது பெண்..மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்