புதுடெல்லி: அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்வது மட்டுமின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,"என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், அமித்ஷா ராஜினாமா செய்வதுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்" - அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் விமர்சனம்!
இது குறித்து முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "பாபாசாகேப் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதை இந்த நாடு பொறுத்துக் கொள்ளாது. மாநிலங்களவையில் அம்பேத்கர் பற்றிக் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்கவேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை கட்டமைத்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். மிக சிறந்த மனிதரான அவர் நாட்டிற்கு வழிகாட்டினார். இந்த நாடு அவர் அவமதிக்கப்பட்டதையோ அல்லது அவரால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கப்படுவதையோ பொறுத்துக் கொள்ளாது,"என்று கூறியுள்ளார்.
अंबेडकर जी का नाम लेने से अधिकार मिलते हैं।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 18, 2024
अंबेडकर जी का नाम लेना मानवीय गरिमा का प्रतीक है।
अंबेडकर जी का नाम करोड़ों दलितों-वंचितों के आत्मसम्मान का प्रतीक है। pic.twitter.com/gwdHZ6j7sm
இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, அம்பேத்கரின் பெயருக்கு உரிமை கொண்டாட வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அவரது பெயரை மனித கண்ணியத்தின் சின்னமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான பட்டியலினத்தவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையின் அடையாளமாக அம்பேத்கர் பெயர் உள்ளது," என்று கூறியுள்ளார்.