சிம்லா : நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்தியில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 3 சுயேட்சைகள் டெல்லியில் இன்று (மார்ச்.23) பாஜகவில் இணைந்தனர்.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் ஆளும் காங்கிரசை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹஜானுக்கு வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அபிஷேக் மனு சிங்வி தோல்வியை தழுவினார்.
இதையடுத்து கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேந்திர ரானா, சுதிர் சர்மா, ஐடி லக்னபால், ரவி தாகூர், தேவேந்திர பூட்டோ, மற்றும் சைத்தன்ய ஷர்மாலாங் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தங்களது தகுதி நீக்கத்திற்கு எதிராக 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், சுயேட்சைகள் ஹோஷியார் சிங், கேஎல் தாகூர், ஆஷிஷ் சர்மா ஆகியோர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இமாச்சல பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர், ராஜீவ் பிந்தல் ஆகிய பாஜக தலைவர்கள் தலைமையில் டெல்லியில் முகாமிட்டனர்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சுயேட்சைகள் 3 பேர் என மொத்தம் 9 பேரும் தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதனிடையே தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை கடந்த மார்ச் 18ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் அதுகுறித்து இமாச்சல பிரதேச தலைமை செயலகம் பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், பாஜகவில் இணைந்த கையோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் தங்களது மனுவை வாபஸ் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இமாச்சல பிரதேசத்தில் காலியாக உள்ள சட்டப் பேரவை 6 இடங்களுக்கான இடைத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலங்கானா எம்எல்சி கவிதாவின் காவல் நீட்டிப்பு! - Kavitha Custody Extend