சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) கார் ஒன்று கட்டுப்பாடை இழந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில், விபத்துக்குள்ளான கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த காரில் மூன்று பேர் பயணம் செய்ததாகவும். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியிம் அந்த காரில் தான் பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது. திரைப்படத்திற்கு லோகேஷன் பார்ப்பதற்காக வெற்றி துரைசாமி அவரது நண்பர் கோபிநாத் உடன் அங்கு சென்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து இமாச்சல பிரதேச காவல்துறை தரப்பில் நேற்று அறிக்கை அளிக்கப்பட்டது. அதில், "பிப்ரவரி 4ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் கின்னூர் மாவட்டத்தில் கஷாங் நலாங் பகுதி அருகே இன்னோவா கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான காரில் இருந்த திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றி துரைசாமி தேடப்பட்டு வருகிறார். காரின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது கோபிநாத் காயங்களுடன் ஆற்றங்கரையில் மீட்கப்பட்டு ரெக்காங் பியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மீட்புக்குழுவினர் ஆற்றில் விழுந்த காரில் இருந்து ஓட்டுநர் தன்சித் உடலை மீட்டனர். மேலும் வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் ஆற்றின் கரைகளில் அவரைத் தேடும் பணி நடைபெற்றது. மோசமான வானிலை மற்றும் பொழுது சாய்ந்ததால் முதல் நாள் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் நாள் பணியில் சிம்லாவின் ஜியோரி பகுதிதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீசார் உடன் இணைந்து ஆற்றின் கரையோரம் வெற்றி துரைசாமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு குழு சட்லஜ் ஆற்றில் விழுந்த காரை வெளியில் எடுத்து காரை முழுமையாக சோதனை செய்தது.
மேலும் ஆற்றின் கரைகளில் இருந்த பாறைகளில் மனித மூளையின் சிதைந்த பாகங்கள் போன்ற உடல் உறுப்புகளின் சிதைவுகள் ஒட்டி இருந்தது கண்டறியப்பட்டது. விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் மற்றும் உயிரிழந்த ஓட்டுநரின் உடலில் அத்தகைய காயங்கள் இல்லாததால் இது வெற்றியின் காயங்களின் சிதைவுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த சிதைந்த பாகங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஜூங்காவில் உள்ள மாநில தடயவியல் கூடத்திற்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் போலீசார் உடன் இணைந்து தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சுந்தீர் நகர் மற்றும் மண்டி பகுதியில் இருந்து டைவர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடற்படையின் சிறப்பு டைவர்ஸ் குழுவிற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக சைதை துரைசாமி அறிவித்துள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நான்காவது நாளாக நடந்து வரும் மீட்புப் பணி குறித்து குன்னூர் துணை ஆணையர் அமித் குமார் ஷர்மா கூறுகையில், “வெற்றி துரைசாமியைத் தேடுவதற்காக கடற்படையின் உதவியையும் நாடியுள்ளோம். இன்று மாலைக்குள் கடற்படையினர் இங்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கிறோம். இங்கு உறைபனி காலம் துவங்கியுள்ள நிலையில், மைனஸ் 16 டிகிரி குளிர் நிலவும் நிலையில், வெற்றி துரைசாமியை தேடும் பணியில் சிறப்பு டைவர்ஸ் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்!