ஐதராபாத்: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, இன்று மாலையுடன் 7வது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஒய்ந்தது.
7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி 7வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஏறத்தாழ 904 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
இதையடுத்து அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரங்கள் இன்று மாலையுடன் ஓய்ந்தன. அடுத்த இரண்டு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் விளம்பரம், நேரடியாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதேநேரம் தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்களை மீறும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் ஹோசிராபூரில் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ஜெய் சங்கர், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர், கிரிராஜ் சிங், நாராயண் ரானே, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
7வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் களத்தில் மொத்தம் 904 வேட்பாளர்களில் 299 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் அதிகபட்சமாக 198 கோடி ரூபாய் சொத்துகள் வைத்திருப்பதாக வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார்.
இந்த 299 வேட்பாளர்களுக்கு குறைந்தது 1 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 111 வேட்பாளர்கள் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 84 வேட்பாளர்கள் 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை சொத்துகளை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்முவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! ஆன்மீக சுற்றுலா வந்த போது சோகம்! - Jammu Kashmir Bus Accident