டெல்லி: நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் இன்று 'டெல்லி சலோ' என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து உள்ளனர். விவசாய சங்கத் தலைவர்களுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனவும், அரசு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை டெல்லி மகாத்மா காந்தி இன்ஸ்டியூட்டில் விவசாய சங்கத் தலைவர்களுடன், மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், மேலும் தனிக்குழு அமைத்து மீதமுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் 2020-2021 நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், விவசாயிகள் முக்கிய கோரிக்கையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க உத்தரவாதம் அளிக்கும்படி கூறுகின்றனர்.
சம்யுக்தா கிசான் மொர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மொர்சா ஆகிய விவசாய சங்கங்கள், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று டெல்லியில் 'டெல்லி சலோ' என்ற மாபெரும் போராட்டம் நடத்த ஆயத்தமாகியுள்ளனர். இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில், டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி காவல்துறை, தலைநகரில் ஒரு மாதத்திற்கு பொதுக்கூட்டம் நடத்தவும், மாநகராட்சி பகுதிகளில் டிராக்டர் நுழையவும் தடை விதித்துள்ளது. டெல்லி முழுவதும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் ஜரோடா எல்லை, சிங்கு எல்லை ஆகிய பகுதிகளில் சாலையில் பேரிகாட் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிதிஷ் குமார் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார்!