லக்னோ: ஹரியானாவில் உள்ள ஜாட் சமூகத்தினர் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வாக்களித்ததால் ஐஎன்எல்டி-பிஎஸ்பி கூட்டணிக்கு அவர்கள் வாக்குகள் கிடைக்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய லோக்தள் (ஐஎன்எல்டி) கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐஎன்எல்டியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால், 90 தொகுதிகளில் போட்டியிட்டும் ஐஎன்எல்டி மட்டும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிஎஸ்பி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி ஐஎன்எல்டிக்கு 4.14 % வாக்குகளும், பிஎஸ்பிக்கு 1.82 % வாக்குகளும் கிடைத்தன.
இந்த நிலையில், பிஎஸ்பி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஐஎன்எல்டி-பிஎஸ்பி கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில் வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜாட் சமூகத்தினர் பிஎஸ்பிக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் பிஎஸ்பி வேட்பாளர்கள் தோற்று விட்டனர். பிஎஸ்பியின் ஒட்டு மொத்த வாக்குகள் மாறியிருக்கின்றன.
அதே நேரத்தில் உபியில் உள்ள ஜாட் சமூகத்தினர் மனநிலையில் மாற்றம் உள்ளது. அவர்களில் பலர் பிஎஸ்பி எம்எல்ஏக்களாக உள்ளனர். பிஎஸ்பி ஆட்சியில் அமைச்சர்களாகவும் இருந்தனர். எனவே ஹரியானா ஜாட் சமூகத்தினரும், தங்களது உபி சகோதரர்களைப் போல பிஎஸ்பிக்கு ஆதரவான மனநிலையை மேற்கொள்ள வேண்டும். இது என்னுடைய ஒரு சிறப்பான அறிவுரை.
முழு பலத்துடன் ஹரியானா தேர்தலில் போட்டியிட்ட பிஎஸ்பி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி.அவர்களுடைய கடின உழைப்பு வீணாகாது. மக்கள் அதிருப்தி அடையவோ அல்லது நம்பிக்கை இழக்கவோ கூடாது. அவர்கள் தங்களது பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு தயாராக வேண்டும். ஒரு புதிய பாதையை தொடங்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.