அகமதாபாத்: பில்கிஸ் பானு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 நபர்களில் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவரான ரமேஷ் சந்தனா, தனது உறவினரின் திருமண விழாவிற்குச் செல்வதற்காக பரோலுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் பரோலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இச்சிறையில் உள்ள 11 நபர்களில் இரண்டாவது முக்கியமான குற்றம் சாட்டப்பட்ட நபரான ரமேஷ் சந்தனா என்பவர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் பரோல் வேண்டி கடந்த வாரம் விண்ணப்பித்து இருந்தார். தனது சகோதரியின் மகனின் திருமண விழாவிற்காக செல்வதற்காக பரோல் வேண்டி அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு 10 நாட்களுக்கு பரோல் வழங்கி நீதிபதி திவ்யேஷ் ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு அளித்த தகவலின்படி, 2008-இல் சிறையில் அடைக்கப்பட்டது முதல் 1,198 நாட்கள் பரோலிலும், ஃபர்லோ விடுப்பிலும் இருந்துள்ளார். அதேபோல், மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான பிரதீப் மோடியா என்பவர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கோத்ரா சிறையில் இருந்து பிப்ரவரி 7 முதல் 11 வரை என 4 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
குஜராத்தில் 2002-இல் நடந்த கலவரத்தின்போது, கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 14 பேரை கொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்திருந்தது.
இதையடுத்து 14 ஆண்டுகள் சிறை தண்டைக்குப் பிறகு, கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசு நன்னடத்தை காரணமாக 11 பேரையும் முன்விடுதலை செய்த நிலையில், நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசால் முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட், குஜராத் அரசின் முன்விடுதலை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு, இது தொடர்பாக விசாரணைக்காக தனிக்குழு அமைக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8ஆம் தேதி, குஜராத் அரசின் முன் விடுதலை ரத்து செய்யப்பட்டது.
மேலும், ஒருதலைபட்சமாக குஜராத் அரசு உத்தரவிட்டு இருந்ததாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் இரண்டு வாரத்தில் சரணடையும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா கிளைச் சிறையில் பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நை, ஜஸ்வந்த் நை, மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜுபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகிய 11 பேரும் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேர் மீண்டும் சரண்!