டெல்லி: 18வது மக்களவையின் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர், நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை அரசு நியாயமான முறையில் விசாரித்து, தவறு இழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார். இதற்கு முன்னரும் பல்வேறு மாநிலங்களில் வினாத் தாள் கசிவு நடந்ததை காண முடிந்ததாகவும், மேலும் இது போன்ற வினாத் தாள் கசிவுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நாடாளுமன்றத்தில் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, எதிர்கால இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுடன் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மீண்டும் நிறுவும் வகையில் சிஏஏ சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளதாக கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை அரசு வழங்கி வருவதாகவும், குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற குடும்பங்கள்ன் வளமான வாழ்க்கைக்கு தான் வாழ்த்துவதாக கூறினார். மேலும், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்வி வளாகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் நாளந்தா ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, அடிப்படை அறிவு மையமாக இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சான்றாகும் என்றும் புதிய நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக மாற்ற உதவும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த அவசரநிலை பிரகடன குறித்து பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதலின் மிகப் பெரிய கருப்பு பக்கம் எமர்ஜென்சி என்று விமர்சித்தார். மேலும், எமர்ஜென்சியின் போது முழு நாடும் குழப்பத்தில் மூழ்கியதாகவும் ஆனால் அத்தகைய அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளுக்கு எதிர்த்து தேசம் வெற்றி பெற்றதாகவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிம் கிஷான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியா விவசாயிகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், அண்மையில் அத்திடத்தின் 17வது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காரீப் பருவ கால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப விவசாயத்தின் கட்டமைப்பை நவீன காலத்தின் வடிவில் அரசு மாற்றியுள்ளதாகம் அவர் கூறினார். அண்மைக் காலமாக இயற்கை விவசாய பொருட்கள் மீதான தேவை சர்வதேச அளவில் அதிகரித்து உள்ள நிலையில், அதை ஈடுகட்டும் அளவுக்கு இந்திய விவசாயிகள் தயாராக உள்ளதாக கூறினார்.
2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக உலகமே கொண்டாடியதாகவும், அண்மையில், சர்வதேச யோகா தினத்தை உலகமே கொண்டாடுவதை காண முடிந்தததாகவும் அவர் கூறினார். ஆயுதப் படைகளில் சீர்திருத்த செயல்முறைகளை தொடர்ந்து எந்நேரத்திலும், போருக்குத் தயாராக இருக்கும் தயார் நிலை உள்ளதாக அவர் தெரிவித்தார்.