புதுடெல்லி: திறன் மிக்க இந்திய தொழிலாளர்களுக்கான விசா எண்ணிக்கையை 20,000த்தில் இருந்து 90,000 ஆக உயர்த்தும் ஜெர்மனியின் முடிவை நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், மூன்று நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்தார். இன்று அவர் இருநாடுகளுக்கு இடையேயான 7ஆவது ஆலோசனை கருத்தரங்கில் பங்கேற்றார். ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் பரஸ்பரம் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், பசுமை எரிபொருள் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெர்மனியின் வர்த்தகத்துக்கான ஆசியா பசுபிக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்குவதற்கான பாதை குறித்து நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த முக்கியமான தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஜெர்மன் அமைச்சரவை, இந்தியாவின் மீது கவனம் செலுத்தும் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. திறன் மிகுந்த இந்திய தொழிலாளர்களுக்கான விசா எண்ணிக்கையை 20,000த்தில் இருந்து 90,000 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது ஜெர்மனியின் வளர்ச்சிக்கு ஒரு வேகத்தை அளிக்கும்.
உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்கள் என்ற வகையில் உலகின் நலனுக்கான வலுவான சக்தியாக உருவாக முடியும். இந்தியாவின் மீது கவனம் செலுத்தும் ஆவணம் அதற்கான வரைபடமாகும். முழுமையான அணுகுமுறை மற்றும் மூலோபாய கூட்டாண்மை ஆகியவற்றை தொடர்வதற்கான ஜேர்மனியின் அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது. இந்தியாவின் திறன் மிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஜெர்மனியின் புதிய விசா கொள்கை கோடிட்டுக்காட்டுகிறது," என்று குறிப்பிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்