பாட்னா: பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பார்ஹ் அருகே கங்கை ஆற்றின் உமந்தா காட் பகுதியில் இன்று (ஜூன்.16) 17 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்பட பல்வேறு மீட்புக் குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், 13 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீரில் மூழ்கிய மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கங்கை தசராவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், புனித நீராட கங்கை ஆற்றுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பார்ஹில் உள்ள உமாநாத் காட் பகுதியில் படகு மூலம் மக்கள் ஆற்றை கடக்கும்போது, நிலை தடுமாறி இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் மூழ்கி மாயமான எஞ்சியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாட்னாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இவிஎம் வரமா? சாபமா? எக்ஸ் தளத்தில் ராகுல், சந்திரசேகர், எலான் மகஸ்க் காரசார விவாதம்! - Elon Musk Rahul EVM Controversy