ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமோஜி ராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் ராமோஜி ராவின் மறைவிற்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி: "ராமோஜி ராவ் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்தால் பலனடைவதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: "புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர், ஊடக தொழிலதிபர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்ட ராமோஜி ராவ் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பத்ம விபூஷண் விருது பெற்ற இவர், இந்திய ஊடகங்களை மாற்றியமைத்து, சினிமா மற்றும் பத்திரிகைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ராமோஜி ராவின் மறைவிற்கு இரங்கள்ளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "சாதாரண குடும்பத்தில் பிறந்து அசாதாரண சாதனைகளைப் படைத்த ராமோஜி ராவ் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு தெலுங்கு மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பேரிழப்பாகும். அவர் நிறுவிய பல நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எத்தனையோ சவால்களையும், பிரச்சனைகளையும் கடந்தவர்.
ஊடகத்துறையில் சிகரமாக இருந்த அவர் இப்போது இல்லை என்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. நான் ராமோஜி ராவுடன் 4 தசாப்தங்களாக தொடர்பு கொண்டுள்ளேன். பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதில் அவர் எனக்கு ஒரு உத்வேகம். ராமோஜியின் மறைவால் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஈனாடு குழும நிறுவன ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமோஜி ராவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத்சிங்: ராமோஜி ராவ் காருவின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஆழமான முத்திரைகளைப் பதித்து தெலுங்கு ஊடகங்களின் அதிபராக இருந்தார். அவரது மறைவு ஊடகங்களுக்கும், திரையுலகிற்கும் பெரும் இழப்பாகும்" என தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்: ஹைதராபாத்தில் பிரபலமான ஈநாடு செய்தித்தாள் மற்றும் பிலிம் சிட்டியின் நிறுவனரான ஸ்ரீ ராமோஜி ராவ் இப்போது இல்லை. பத்திரிகைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர், அவர் தெலுங்கு பேசும் உலகில் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: LIVE: ராமோஜி ராவ் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி நேரலை - RAMOJI RAO TRIBUTE