பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானர். அவருக்கு வயது 92. உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக எஸ்.எம். கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள இல்லத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் முதல் கவர்னர் வரை
எஸ்.எம். கிருஷ்ணா, 1932 ஆம் ஆண்டு மே 1இல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்தார். இவர், அமெரிக்காவில் டெக்சாஸின் டல்லாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்திலும், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளியிலும் சட்ட பட்டப்படிப்பை முடித்தார். 1962 ஆம் ஆண்டு மத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக வெற்றி பெற்று தேர்தல் அரசியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1999 முதல் மே 28, 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார். மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்தார்.
முன்னதாக, 1989 முதல் ஜனவரி 1993 வரை கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். 1971 மற்றும் 2014 க்கு இடையில் பல முறை மக்களவை மற்றும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது வயதைக் காரணம் காட்டி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அரசியல் ஓய்வுக்கு பிறகு உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எம். கிருஷ்ணா இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், சாம்பவி, மாளவிகா என்ற இரு மகள்களும் உள்ளனர். எஸ்.எம். கிருஷ்ணாவின் உடல் இன்று மத்தூருக்கு கொண்டு செல்லப்படும் என்று அவரது வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, '' எஸ்.எம். கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட ஒரு சிறந்த தலைவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எப்போதும் அயராது உழைத்தவர். கர்நாடக முதல்வராக அவர் மாநிலத்தில் குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தியதற்காக, அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். பல ஆண்டுகளாக அவருடன் பழகுவதற்கு எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்'' என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, '' கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. வளர்ச்சியின் வீரரான அவர், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.