கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் திலீப், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்ற கருத்தை வெளியிட்டார். இது மாநிலம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.
அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கக் கோரி திலீப் கோஷ்க்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து மம்தா பானர்ஜி குறித்து வெளியிட்ட அவதூறு கருத்துக்கு திலீப் கோஷ் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், துர்காப்பூர் காவல் நிலையத்தில் திலீப் கோஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தனிநபர் ஒருவர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாகவும், பெண் மீது அநாகரீகமான முறையில் கருத்து தெரிவித்தது உள்ளிட்ட் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.