டெல்லி: நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை.22) கூடியது. மக்களவையில் 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் 2023-24 நிதி ஆண்டில் உலகளாவிய மற்றும் வெளிப்புற சவால்கள் இருந்த போதிலும் கட்டமைக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் முன்னோக்கி கொண்டு சென்றது என்றார். மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்தியதால், இந்த சவால்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
இதன் காரணமாக, 2024 ஆண்டில் இந்தியாவின் நிகர் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததாகவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 7 சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் நிர்மலா சிதாராமன் குறிப்பிட்டார். நிலையான நுகர்வு தேவை மற்றும் சீராக மேம்படுத்தப்பட்ட முதலீட்டு தேவை ஆகியவற்றால் இந்த இலக்கை அடைந்ததாக கூறினார்.
அதேபோல் 2011-12 நிதி ஆண்டில் மொத்த மதிப்பு கூட்டல் துறையை காட்டிலும் 2024 ஆண்டில் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2011-12 நிதி ஆண்டில் நிலையான வருவாயில் உள்ள நிகர வரிகள் 2024 நிதி ஆண்டில் 19.1 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டில் வேலையின்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும், கரோனா காலக்கட்டத்தை காட்டிலும் அதற்கு பிந்தைய காலக்கட்டத்தில் வேலையின்மை விகிதம் என்பது பெரிய அளவில் குறைந்து இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை விகிதம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் கரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
பாலினக் விகிதாச்சாரத்தில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளாக உயர்ந்து வருவதாகவும், கடந்த 2017-18 நிதி ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் விகிதம் 2022-23 நிதி ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்து உள்ளதாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2025 நிதி ஆண்டில் நிகழ் நேர ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும் சந்தை நிலவரங்களை பொறுத்து அது மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
கரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும், 2020 ஆண்டை காட்டிலும் 2024 நிதி ஆண்டில் நாட்டின் நிகழ் நேர ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2020ல் 4.6 சதவீதமாக இருந்த நிலையில், 2021ல் 5.8 சதவிதமாக இருந்ததாக கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 3.2 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், சந்தை அபாயங்கள் பரவலாக இருக்கக் கூடும் என எதிர்பார்ப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். பல்வேறு மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பான சமிக்ஞை வெளிப்படுத்திய நிலையில், பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறினார்.
நாட்டில் தனியார் முதலிடுகள் அதிகரித்துள்ளதாகவும் 2023-24 நிதி ஆண்டில் 9 சதவீதம் வரை ஒட்டுமொத்த தனியார் மூலதன பங்குகள் உயர்ந்து உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையின் படி சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், மொத்த பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக மழைக் கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நாடாளுமன்ற விரைந்த பிரதமர் மோடி, வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடப்பு கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமான வகையில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், எதிர்க்கட்சிகள் தங்களது குற்றங்களை மறைக்க அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம் என்றும் நாட்டு மக்களுக்கு தான் அளித்து வரும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதே மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்த பட்ஜெட் அமிர்த காலத்தின் மிக முக்கியமான பட்ஜெட் என்றும் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான அரசின் திட்டங்களை தற்போதைய பட்ஜெட் தீர்மானிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்கால இந்தியா என்ற கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பிரதமர் மோடி கூறி இருந்தார்.
இதையும் படிங்க: "அமிர்த காலத்தை நோக்கிய பட்ஜெட்.. எதிர்க்கட்சிகள் சிந்தித்து ஒத்துழைப்பு வழங்குக"- பிரதமர் மோடி! - Parliament Monsoon session 2024