புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி மேற்கொண்ட விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஷம்பு எல்லையில் குவிந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல உள்ளனர். இதனை அடுத்து ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் மொபைல் இன்டர்நெட் சேவையை முடக்கப்பட்டுள்ளது. மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீசார் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இது குறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், "டெல்லி போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கு எல்லையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாப்-ஹரியானா எல்லையை ஒட்டிய ஷம்பு எல்லையில் நிலவரத்தைப் பொறுத்து காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,"என்றார்.
நொய்டா எல்லையிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உத்தரபிரதேசத்தில் இருந்த விவசாயிகள் குவிந்திருக்கின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்பட வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13 மற்றும் 21ஆம் தேதிகளில் டெல்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: புஷ்பா 2: கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்; அல்லு அர்ஜுன் மீது பாய்ந்த வழக்கு!
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா, கிஷான் மஸ்தூர் மோர்சா ஆகிய அமைப்புகளின் கீழ் விவசாயிகள் ஷம்பு மற்றும் கானௌரி பகுதிகளில் இப்போது குவிந்து வருகின்றனர். கடந்த புதன் கிழமையன்று ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்ட நிர்வாகம், "டெல்லியை நோக்கி பேரணி மேற்கொள்வதை பஞ்சாப் விவசாயிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெல்லி போலீசாரிடம் இருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே மேற்கொண்டு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,"என்று கூறியுள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி போலீசார்,"டெல்லியை நோக்கி பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு பஞ்சாப் விவசாயிகள் யாரும் அணுகவில்லை. அம்பாலா மாவட்ட நிர்வாகம் பிஎன்எஸ்எஸ் சட்டம் பிரிவு 163ன் கீழ் சில தடைகளை விதித்திருக்கிறது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,"என்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையன்று பேட்டி அளித்த விவசாயிகள் அமைப்பின் தலைவர் சர்வண் சிங் பாந்தர்,"விவசாயிகளைக் கொண்ட குழுவினர் அம்பாலா காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து டெல்லி நோக்கி வரும் 6ஆம் தேதி பேரணி செல்வது குறித்து கூறியிருக்கின்றோம். பேரணி அமைதியாக நடைபெறும் என்றும் போலீசாரிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது,"என்றார்
Congress backs farmers' 'Delhi Chalo' march to Parliament, calls for pro-farmer reforms
— ANI Digital (@ani_digital) December 6, 2024
Read @ANI Story | https://t.co/LydCAlWt8h#Congress #JairamRamesh #FarmersProtest #Parliament pic.twitter.com/dr4n2nGZ0W
இதனிடையே விவசாயிகள் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், "நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் இன்று பேரணி மேற்கொள்கின்றனர். பிரமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாய வர்த்தகக் கொள்கைகளை மேற்பார்வையிட சுதந்திரமான அமைப்பும் நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களின் 16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த அரசு அதே போல விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,"என்று கூறியுள்ளார்.