டெல்லி : நில மோசடிப் புகாரில் கோடிக்கணக்கிலான பணத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.
தொடர்ந்து அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை கைது எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் இறுதி தீர்ப்பை வெளியிடாமல் ஜார்கண் உயர்நீதிமன்றம் காலம் தாழ்த்துவாக கூறி ஹேமந்த் சோரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஹேமந்த் சோரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது என்றும் கபில் சிபில் தெரிவித்தார். இந்த வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடங்களை போலி ஆவணங்கள் தயார் செய்து போலியான விற்பனை மற்றும் வாங்குபவர்களை உருவாக்கி பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : இவிஎம், விவிபாட் இயந்திர விவகாரம் - 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜர் - உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Lok Sabha Election 2024