சென்னை: பாஜக அரசிற்கு பலவீனமாக கருதப்பட்டு வந்த தென்னிந்தியாவில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத முடிவுகள் வரும் என்று மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். 4 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 10 கோடி உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 11 கோடிக்கு அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 55 கோடி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றபோது அங்குள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் 132 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கர்நாடக மாநிலத்திலுள்ள 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து, சிஏஏ, முத்தலாக் சட்டம், கோயில்கள் சீரமைப்பு போன்ற பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள், இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி மூலம் அனைவரின் நம்பிக்கையையும் மோடி பெற்றுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் வாக்களிப்பர். குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பாஜக கட்சி மேம்படும். பல கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலுள்ள ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என நான்கு சாதிகள் மட்டும் உள்ளன. இந்த நான்கு சாதிகள் வளர்ச்சிக்காக பாடுபட்டார் என தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் பாஜக மாநிலத் தலைவர் தாக்கப்பட்டார். அங்கு நடைபெறும் அநீதிக்கு மம்தா பதில் அளிக்க வேண்டும். பாஜக எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜக அரசு வெற்றி பெறும். இங்கு சமாஜ்வாதி கட்சி நீரில் மூழ்கிக் கிடக்கிறது.
மக்களவையில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதால், சோனியா காந்தி மாநிலங்களவையைத் தேர்வு செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 29 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். பாஜக எனக்கு நிறையக் கொடுத்துள்ளது தற்போது கட்சிக்கு திரும்பச் செலுத்த வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணல் குவாரி விவகாரம்; அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி