பெங்களூரு: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூன்.25) ஆஜரானார். வழக்கின் மீதான நேரடி விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அதன் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
#WATCH | Karnataka: Tamil Nadu Minister and DMK leader Udhayanidhi Stalin arrives at a court in Bengaluru in connection with his 'Santana Dharma' remark. pic.twitter.com/ApJoXq5RA9
— ANI (@ANI) June 25, 2024
மேலும், இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1 லட்ச ரூபாய் பிணையுடன் கூடிய நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் என்பவர் தொடர்ந்து வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகவில்லை.
இந்த முறையும் ஆஜராகாமல் போகும் பட்சத்தில் நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவு போடக் கூடும் என்பதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூன்.25) உதயநிதி ஸ்டாலின் ஆஜரானார். இந்நிலையில், தான் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினுக்கு வடமாநிலங்களில் பலர் கண்டனங்கள் எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே திமுக அமைச்சர் சேகர் பாபு, எம்பிக்கள் ஆ.ராசா மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோருக்கு எதிராக நிதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதேபோல் சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட விவகாரத்தில் பீகார் மாநிலம் ஆரா நீதிமன்றத்திலும் உதயநிதி மீது வழக்கு தொடர்ப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களவை சபாநாயகர் தேர்வு: காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி! யாருக்கு வாய்ப்பு சாத்தியம்? - Lok Sabha Speaker election