டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான பணமோசடி விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமலாகக்த்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கலால் வரி கொள்கை வகுத்ததில் 100 கோடி ரூபாய் வரை பணமோசடி நடந்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்டமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரே, உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான், ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பை சோரன், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க துணை நிலை ஆளுநருக்கு உத்தரவிடக் கோரியும், தலைநகரில் துணை நிலை ஆளுநர் வாயிலாக மத்திய அரசின் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உத்தரவிடக் கோரியும் இந்து சேனா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் மூலம் கெஜ்ரிவால் கோ ஆசிர்வாத் என்ற தலைப்பில் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
இதையும் படிங்க : பாரத ரத்னா விருது: பிவி நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார் ! - Bharat Ratna Award