டெல்லி : கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மன்மோகன் சிங் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளை மறுபகிர்வு என்று கூறி பறித்து நாட்டிலும் அத்துமீறி ஊடுருவியவர்களுக்கு வழங்குவார்கள் என்றார்.
மேலும், நாட்டில் அத்துமீறி ஊடுருவியவர்கள், அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு நாட்டின் வளம் மற்றும் செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கீட்டு கொடுத்ததாகவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் நாட்டில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை கூட காங்கிரஸ் கட்சி பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும், பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.
இந்நிலையில், பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து குறித்து விளக்கம் அளிக்கக் கோரி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. மேலும், ஜேபி நட்டாவுக்கு வழங்கிய நோட்டீசில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை நன்கு அறிந்து அறம் சார்ந்து பேச வேண்டும் என்றும் அதை கட்சித் தலைவர் உறுதிபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மக்களவை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் வழங்கி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக அளித்த புகார்கள் தொடர்பாக பதிலளிக்க கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களில் மோடி, ராகுல் காந்தி அல்லது மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் பெயர்களை நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் விவரங்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ராகுல் காந்தி பெயரிலும், பட்டியலின் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வேறுபாடு காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மல்லிகார்ஜூன கார்கே மீதும் பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அமேதியில் மீண்டும் ஸ்மிரிதி ராணி - ராகுல் காந்தி போட்டி? ரேபரலியில் பிரியங்கா காந்தி போட்டியா? - Lok Sabha Election 2024