டெல்லி : கேரளாவில் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று (ஏப்.17) காசர்கோடு பகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது விவிபாட் இயந்திரத்துடன் நடந்த மாதிரி வாக்குப்பதிவில், ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக, அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக இருப்பதாகவும் புகார்கள் தெரிவித்ததுடன், உடனடியாக அதனை மற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல் இரட்டை வாக்குகள் பதிவானதாக சொல்லப்பட்டது.
இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரத்தில் விழும் ஒப்புகை வாக்குச் சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்.18) நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவில் ஒருமுறை பொத்தான் அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக எழுந்த புகார்களை சுட்டிக் காட்டினார்.
அதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதிலை அளித்து உள்ளனர்.
அதில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னதாக முன்பு பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு விடும். ஏதேனும், ஒரு சில இடங்களில் பழைய வாக்குகள் கணக்காக காண்பிக்கும். அதுவும் மாதிரி வாக்குப்பதிவின் போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும்.
மேலும், மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது உள்ளதா என்பதும் சரிபார்க்கப்படும். அவை அனைத்தும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும். காசர்கோடு சம்பவத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகிறது என்பது உண்மை இல்லை.
இது உண்மைக்கு புறம்பான செய்தி. அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : விவிபாட், வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: "தேர்தல் சுதந்திரமாகவும், நியமாகவும் நடப்பதை உறுதி செய்க" - உச்ச நீதிமன்றம்! - Lok Sabha Election 2024