மும்பை : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் AI 116 என்ற விமானம் வந்து உள்ளது. விமானத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணித்து உள்ளார். விமான நிறுவன ஊழியர்களிடம் முதியவர் சக்கர நாற்காலி கோரி இருந்த நிலையில், பற்றாக்குறை காரணமாக முதியவருக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து விமான நிலையத்தின் இமிகிரேஷன் முனையத்திற்கு ஏறத்தாழ 1 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதியவர் நடந்து சென்று உள்ளார். இந்நிலையில் திடீரென முதியவர் நிலைதடுமாறி விமான நிலையத்தில் சரிந்து விழுந்து உள்ளார். அருகில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு விமான நிலையம் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
ஏறத்தாழ நான்கு நாட்கள் முதியவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (பிப்.16) சிகிச்சை பலனளிக்கமால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முதியவர் லேசான மாரடைப்பு மற்றும் பல்வேறு இணை நோய்கள் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏர் இந்தியா விமான பயணி விமான நிலையத்தில் சரிந்து விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமானத்தில் 15 சக்கர நாற்காலிகள் மட்டுமே இருந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிகளுக்கு வீல்சேர் தேவைப்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மைக் காலமாக விமான நிலையங்களில் வீல் சேர் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், வீல் சேரில் வந்த பயணியை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் எழுந்து நிற்கக் கூறியதாக ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : மீண்டும் செயல்படத் தொடங்கிய காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்.. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி!