ஹாசன்: கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோஸ்கோட் தாலுகாவிற்கு உட்பட்ட சிக்ககோலிகா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிசாமி கவுடா மற்றும் அவரது மனைவி ஷில்பாராணி. கடந்த 13ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் கந்தசி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொல்லரஹள்ளி கேட் அருகே முனிசாமி கவுடா பஞ்சரான தனது கார் டையரை மாற்றியபோது கார் மீது லாரி மோதியதாகவும், இந்த விபத்தில் முனிசாமி கவுடா உயிரிழந்ததாகவும் போலீசாருக்கு புகார் வந்ததுள்ளது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆய்வு நடத்தி, காரின் பதிவு எண் மற்றும் சம்பவ இடத்தில் கிடக்கப்பெற்ற ஆதார் அட்டை மற்றும் அடையாள ஆவணங்களை வைத்து, முனிசாமி கவுடாவின் மனைவி ஷில்பாராணிக்கு, போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து, விபத்தில் உயிரிழந்தது தனது கணவன்தான் என்று அடையாளம் காண்பித்து, சடலத்தை வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளையும் செய்துள்ளார் முனிசாமி கவுடாவின் மனைவி ஷில்பாராணி. இதற்கிடையே, இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், முனிசாமி கவுடாவின் மரணம் விபத்தால் ஏற்பட்ட இல்லை என்பதும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட லாரி டிரைவர் தேவேந்திர நாயக் என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதன்படி, நடந்தது விபத்து இல்லை என்பதும், உயிரிழந்தது முனிசாமி கவுடா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, லாரி டிரைவர் தேவேந்திர நாயக் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த சுரேஷ் மற்றும் வசந்த், முனிசாமி கவுடாவின் மனைவி ஷில்பாராணி மற்றும் பிரூரில் தலைமறைவாக இருந்த முனிசாமி கவுடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகமது சுஜீதா கூறுகையில், "முனிசாமி கவுடா பல கோடி ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு செய்துள்ளார். ஆகவே, விபத்து காப்பீடு மூலம் அதிக பணம் பெற திட்டமிட்டு, விபத்தில் முனிசாமி கவுடா இறந்தது போல் நடித்து இந்த சதி திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
இதற்காக, முனிசாமி கவுடா, லாரி டிரைவர் தேவேந்திர நாயக், சுரேஷ், வசந்த் ஆகிய 4 பேரும் சேர்ந்து முனிசாமி கவுடாவின் உருவத்தோடு ஒத்துப்போகும் ஒரு பிச்சைக்காரரை கழுத்தை நெரித்து கொலை செய்து, விபத்தில் உயிரிழந்ததுபோல சித்தரித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களது திட்டத்தின்படி, முனிசாமி கவுடாவின் மனைவி ஷில்பாராணி உயிரிழந்தது தனது கணவர்தான் என்று கூறி நாடகமாடியுள்ளனர்.
ஆகவே, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போலீசார் விசாரணையில் லாரி டிரைவர் தேவேந்திர நாயக் கொடுத்த தகவல் ஆகியவற்றின் அடிப்படையில், முனிசாமி கவுடா மற்றும் அவரது மனைவி ஷில்பாராணி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த தேவேந்திர நாயக், சுரேஷ் மற்றும் வசந்த் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, மேலும் இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பேருக்குதான் நடுநிலைப் பள்ளி; ஆனா ரெண்டே வகுப்பறைதான்! இடுகாட்டில் அமர்ந்து பாடம் படிக்கும் பீகார் மாணவர்கள்