புதுதில்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு, இன்று பூஜ்ய நேரத்தில், வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக பேசினார். அப்போது அவர், "வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்த துல்லியமான அறிவிப்புகளை வெளியிடுவது இந்திய வானிலை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பொறுப்பாகும். கணிக்க முடியாத கனமழை மற்றும் மிகவும் கடுமையான வானிலை நிலவும் நிலையில், வானிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது அவசியமாகிறது.
இந்த இலக்கை அடைவதற்கு, வானிலை ஆய்வு மையத்துக்கு பல கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது. இதற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய (Public Private Partnership) திட்டம் இந்தியாவுக்கு ஏதுவாக இருக்கும் " என்று திமுக எம்.பி. பேசினார்.
மேலும், "செயற்கை நுண்ணறிவு, தரவுகள் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நவீன கட்டமைப்புகளை கொண்ட ஏராளாமான தனியார் நிறுவனங்கள் இன்று உள்ளன. வானிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பதற்கும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கும் இந்நவீன தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.
இதனை கருத்தில் கொண்டு, இதில் அரசு -தனியார் பங்களிப்பு திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு மாநிலங்களவையில் பேசினார்.
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து சில தினங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை பேசியிருந்தார். அப்போது அவர், "கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என ஏழு நாட்களுக்கு முன்னதாக ஜூலை 23ஆம் தேதியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அதே நாளில் ஒன்பது தேசிய பேரிடர் குழுவினரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தோம். ஜூலை 24 அன்று மற்றொரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது" என்றும் அவர் பேசியிருந்தார்.
மேலும், ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய தொலைநிலை உணர்தல் மையம் (National Remote Sensing Centre), இந்திய செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பேரிடர் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டிருந்ததாக நேற்று (ஆகஸ்ட் 1) தகவல் வெளியாகி இருந்தது. அதில், 'தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தது' எனவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வானிலை முன்னெச்சரிக்கை குறித்து, திமுக எம்.பி. மாநிலங்களவையில் இன்று பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வயநாடு நிலச்சரிவு; அமித் ஷா தவறான தகவல்? வானிலை அறிக்கை கூறுவது என்ன?