போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 10 யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில வனத்துறை அமைச்சர் 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நான்கு யானைகள் இறந்து கிடந்தன. கடந்த புதன் கிழமை இரவு மேலும் நான்கு யானைகள் உயிரிழந்தன. தொடர்ந்து வியாழக்கிழமை இரண்டு யானைகள் அடுத்தடுத்து இறந்தன. இதனால், யானைகளின் இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மோகன் யாதவ் கடந்த வெள்ளிக்கிழமை யானைகள் உயிரிழப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் மாநில வனத்துறை அமைச்சர் திலீப் அஹிர்வார், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் பர்ன்வால் ஆகியோரை உமாரியாவுக்கு அனுப்பி யானைகள் உயிரிழப்பு குறித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் யானைகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி..! பத்து யானைகள் அடுத்தடுத்து மரணம்.. இதுதான் காரணமா..?
யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க கூடுதல் முதன்மை தலைமை வனக்காவலர் எல்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழவின் விசாரணை குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு எல்.கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், "உயிரிழந்த யானைகளின் உள்ளுறுப்புகள், கல்லீரல் உள்ளிட்டவை, உத்தபிரதேச மாநிலம் இசத்நகர் நகரில் உள்ள தேசிய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி உள்ளோம். மேலும் ம.பி மாநிலத்தில் உள்ள சாகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கும் அனுப்பி உள்ளோம்.
விசாரணை குறித்த அறிக்கைகள் வந்த பின்னர்தான் யானைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். பிரதேச பரிசோதனை அறிக்கையின்படி வரகு பயிரை யானைகள் உண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதுதான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது,"என்றார்.
இதனிடையே பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் கள ஆய்வின்படி, 13 யானைகள் கொண்ட குழு வனப்பகுதியை ஒட்டி வழக்கம்போல உணவு தேடி சென்றது என்றும், அப்போது வனப்பகுதியை ஒட்டிய விவசாயிகள் நிலத்தில் வரகு பயிரை உண்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாக யானைகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரியவந்திருக்கிறது. எனவே வரகு பயிரிட்டிருந்த 6 விவசாயிகளிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்