பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மேலாளர் சுவாமிநாதன் ஷங்கா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்தப் புகாரில், “கடந்த ஆண்டு அக்டோபரில் எனக்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கால் செய்தார்.
அப்போது, அவர் தன்னை நகுல் என்றும், தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நெருங்கிய உதவியாளர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அது மட்டுமல்லாமல், நீதிபதியின் மகன் சந்தீப் என்பவர் தோனியைச் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 29 அன்று சந்தீப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் ஐடிசி பெங்கால் ஹோட்டலில் வைத்து தோனியையும், என்னையும் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, எப்போது வேண்டுமானாலும் திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக சந்தீப் கூறினார்.
பின்னர், கடந்த நவம்பர் 30 அன்று நான் துபாயில் இருந்தபோது என்னை அழைத்த சந்தீப், 12 பேருக்கு திருப்பதி சிறப்பு தரிசன பாஸ் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, நான் அதனை வேறு யாருக்காவது கொடுக்கச் சொன்னேன். ஆனால், அவர் ஒரு புரோட்டோகால் கடிதம் ஒன்றை கொடுக்கச் சொன்னார்.
தொடர்ந்து, நான் குத்லுகேட்டில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் நண்பரான வினீத் சந்திரசேகருக்கு அழைத்து, திருப்பதி சிறப்பு தரிசனம் குறித்து பேசினேன். பின்னர், நாகேஸ்வர் ராவ் என்ற மற்றொரு நபர் எனக்கு அழைத்து, சாய் கிரியேஷனுக்கு பணம் கொடுக்க விரும்புகிறீர்களா எனக் கேட்டார்.
மேலும், அவர் திருப்பதி சிறப்பு தரிசனம், தங்கும் அறை உள்ளிட்டவைகளுக்கு சேர்த்து 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறினார். எனவே, வினீத் சந்திரசேகர் 3 லட்சம் ரூபாயை கூகுள் பே மூலம் செலுத்தினார். பின்னர், மொத்தமாக 6.33 லட்சம் ரூபாய் ஆன்லைன் வழியாக செலுத்தினோம். இருப்பினும், திருப்பதி சிறப்பு தரிசனம் கிடைக்கவில்லை.
பணம் பெற்ற பிறகு அவர்கள் ஏமாற்றி உள்ளனர். எனவே, இந்தப் புகார் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார். இதன் அடிப்படையில், ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: இண்டிகோ விமான ஊழியர்களால் கசப்பான நிகழ்வு - பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ் புகார்!