டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கையில் இருந்து ஜாமீன் வழங்கக் கோரி தெலங்கனா எம்எல்சி கவிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா தீர்ப்பு வழங்கினார்.
தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் செயல்பட்டு அரசுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கையில் இருந்து ஜாமீன் கோரி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த மே 2ஆம் தேதி அமலாக்கத்துறை கைதில் இருந்து ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, மே 6ஆம் தேதிக்கு சிபிஐ கைது நடவடிக்கையில் இருந்து ஜாமீன் கோரிய மனுவுடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று (மே.6) சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், காணொலி வாயிலாக ஆஜர்படுத்துவதற்கு பதிலாக நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி விசாரிக்கிறார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து இடைக்கால நிவாரணம் கோரி கவிதா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையின் போது பெண் என்பதால் பண மோசடி வழக்கில் கவிதாவுக்கு நீதிமன்றம் பாரபட்சம் காட்டக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இந்தியாவை வல்லரசாக மாற்ற என் மூலம் தெய்வீக சக்தி செயல்படுகிறது"- பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024