டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.சியுமான கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி ஐதராபாத்தில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்தது.
நீதிமன்ற காவலில் கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கவிதா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இதே வழக்கில் விசாரணை நடத்த எம்.எல்.சி கவிதாவை திகார் சிறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், இரு வழக்கில் இருந்தும் ஜாமீன் கோரி கவிதா டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அமலாக்கத்துறை விசாரிக்கும் பண மோசடி வழக்கு மற்றும் சிபிஐ விசாரிக்கும் ஊழல் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளில் இருந்தும் கவிதாவுக்கு ஜாமீன் தர மறுத்து மனுவை நிராகரித்தார்.
இதையடுத்து இரு வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கோரி கவிதா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு ஒற்றை நீதிபதி ஸ்வர்ண கந்தா சர்மாவின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, கவிதாவின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கர்நாடாக தனியார் ஸ்டீல் ஆலை தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி! சென்னையை சேர்ந்தவர் பலி எனத் தகவல்! - Karnataka Steel Plant 3 Dead