டெல்லி : டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகரா ராவின் மகள் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) எம்எல்சியுமான கவிதாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க சிறப்பு நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார். முன்னதாக மார்ச் 16ஆம் தேதி கவிதாவுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், மார்ச் 23ஆம் தேதி அதை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனது மகன் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருவதால் அவனுடன் இருக்க அனுமதிக்கக் கோரி இடைக்கால ஜாமீனை மனுவை கவிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் இடைக்கால ஜாமீனை பரிசீலிக்க வேண்டும் என்றால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மார்ச் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவை கைது செய்தனர். தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் கலால் வரி கொள்கை வகுத்ததில் தனியார் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளித்த புகாரில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு! டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை! - Delhi Excise Policy Scam